கிரிக்கெட்

ஐ.பி.எல். டிக்கெட் வைத்திருப்பவர்கள் மெட்ரோ ரெயிலில் நாளை இலவசமாக பயணிக்கலாம்

சென்னை-லக்னோ அணிகள் இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடைபெற உள்ளது.

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை (10-ந் தேதி) மாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் வைத்திருப்பவர்கள் சென்னை மெட்ரோ ரெயில் இலவசமாக பயணம் செய்யலாம்.

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்களுக்காக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் சி.எஸ்.கே. கிரிக்கெட் லிமிடெட் இணைந்து சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன. அதன்படி, போட்டிக்கான மின்னணு அல்லது காகித பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள், அதில் உள்ள பிரத்யேக கியூ.ஆர். குறியீட்டை மெட்ரோ நிலைய நுழைவு வாயிலில் ஸ்கேன் செய்து பயணிக்கலாம்.

இந்தச் சலுகை மூலம் ரசிகர்கள் 2 முறை நுழைவு மற்றும் 2 முறை வெளியேறுதலை இலவசமாக பயணிக்க அனுமதி உண்டு. சென்னை மெட்ரோவின் எந்தவொரு நிலையத்திலிருந்தும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்கு செல்லவும், அங்கிருந்து திரும்பவும் இந்த வசதி பொருந்தும். போட்டி நடைபெறும் நாளன்று மெட்ரோ ரெயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைபடி இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.