சென்னை,
இங்கிலாந்து அணியின் அதிரடி ஆல்-ரவுண்டரான லியாம் லிவிங்ஸ்டனை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடமிருந்து டிரேட் முறையில் வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2027 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு மற்றும் விடுவிப்பு பட்டியலை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 17-ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அணிகள் வீரர்கள் பரிமாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், லிவிங்ஸ்டனை சிஎஸ்கே அணிக்கு மாற்றுவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்த டிரேட் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அல்லது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
கடந்த 2026 ஐபிஎல் ஏலத்தில் லியாம் லிவிங்ஸ்டனை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ரூ.13 கோடிக்கு ஏலம் எடுத்தது. அதிரடி பேட்டிங் மற்றும் சுழற்பந்து வீசும் திறன் கொண்ட அவர், அணியின் நடுவரிசைக்கு வலுசேர்க்கக்கூடிய வீரராக கருதப்படுகிறார்.
ஏற்கனவே ஹர்திக் பாண்டியா சென்னை அணியில் இணைய உள்ளதாக தகவல் பரவி வரும்நிலையில், தற்போது லிவிங்ஸ்டன் இணைய இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் சிஎஸ்கே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.