கிரிக்கெட்

பேட்ஸ்மேன்கள்தான் வெற்றியைப் பெற்று தந்திருக்க வேண்டும்: தஸ்கின் அகமது

பேட்டிங்கில் தொடர்ந்து தவறுகளைச் செய்து வருகிறோம்

துபாய்,

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், அந்த அணியின் பேட்டிங் சரிவு தங்களுக்கு ஒரு எச்சரிக்கைப் பாடமாக அமைந்துள்ளதாக வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது தெரிவித்துள்ளார். அபுதாபியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, 33.4 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்கதேச அணிக்காக சிறப்பாகப் பந்துவீசிய தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளை வீழ்த்தியபோதிலும், அணியின் தோல்வியைத் தடுக்க முடியவில்லை. இது குறித்து பேசிய அவர்,

“270 ரன்கள் என்பது நிச்சயமாக எட்டக்கூடிய இலக்குதான். குறிப்பாக, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்த இலக்கை எங்களால் துரத்தி வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால், நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. பேட்டிங்கில் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பைக்கூட எங்களால் உருவாக்க முடியவில்லை. ஒரு வலுவான பார்ட்னர்ஷிப் அமைந்திருந்தாலே போட்டியின் முடிவை எங்களுக்குச் சாதகமாக மாற்றியிருக்க முடியும். ஆனால், பேட்டிங்கில் தொடர்ந்து தவறுகளைச் செய்து வருகிறோம்” என்றார்.

மேலும், பந்துவீச்சில் எங்களது செயல்பாட்டில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், பேட்டிங்கில் வீரர்கள் பொறுப்பேற்று விளையாடியிருக்க வேண்டும். இந்தப் போட்டியில் எங்களது பேட்ஸ்மேன்கள்தான் வெற்றியைப் பெற்றுத் தந்திருக்க வேண்டும். அனைவரிடமும் திறமை இருக்கிறது. ஆனால், அந்தத் திறமையைத் தொடர்ந்து ஒரே சீராக வெளிப்படுத்துவதிலும், போட்டியின் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு விளையாடுவதிலும் நாங்கள் முன்னேற வேண்டும். நெருக்கடியான நேரங்களில் அணியாக விரைவாக விக்கெட்டுகளை இழப்பது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வலுவான அணியாக உருவெடுக்க வேண்டுமென்றால், இந்தக் குறையை நிச்சயமாகச் சரிசெய்ய வேண்டும். என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT