மஸ்கட்
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று விளையாடுகின்றன.
13-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்த போட்டி தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியா-பாகிஸ்தான் (ஏ பிரிவு) அணிகள் விளையாடுகின்றன. லக்ஷயா ராய்சந்தானி தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் நேபாளத்தை பந்தாடியது. இதேபோல் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை எளிதில் வீழ்த்தியது.
இந்த இரு அணிகளும் பெற்ற வெற்றி உத்வேகத்துடன், தொடர்ந்து 2-வது வெற்றியை பெற கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம், சோனி ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடி ஒளிபரப்பாகிறது.