கிரிக்கெட்

ஜிம்பாப்வே அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகும் ஜஸ்டின் சம்மன்ஸ்!

குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட விரும்புவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் சம்மன்ஸ் (Justin Sammons) தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடருக்குப் பிறகு அவர் தனது பொறுப்பிலிருந்து விலக உள்ளதாக ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஜஸ்டின் சம்மன்ஸ், தனது சொந்த நாட்டிற்குத் திரும்பி குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட விரும்புவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜிம்பாப்வே அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற ஜஸ்டின் சம்மன்ஸ், தனது பயிற்சியின் கீழ் அணியை பல்வேறு சாதனைகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார். குறிப்பாக, 2026ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணி முதல்முறையாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இது அந்த அணியின் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்தது. மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஜிம்பாப்வே அணி சில முக்கியமான வெற்றிகளைப் பதிவு செய்தது.

ஜஸ்டின் சம்மன்ஸ்

தனது விலகல் குறித்து பேசிய ஜஸ்டின் சம்மன்ஸ், ஜிம்பாப்வே ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகப் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் என்றும், தனக்கு வாய்ப்பளித்த ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம், வீரர்கள், பயிற்சிக் குழுவினர் மற்றும் நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், அணியின் வளர்ச்சிக்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, ஜஸ்டின் சம்மன்ஸின் முடிவு வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ள ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரிய நிர்வாக இயக்குநர் கிவ்மோர் மகோனி (Givemore Makoni), குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதற்காக அவர் எடுத்துள்ள முடிவை மதிப்பதாகக் கூறியுள்ளார். அணியின் முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்புக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT