பெர்த்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2018-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் ஆடிய போது பந்தை சேதப்படுத்திய விவகாரம் 8 ஆண்டு கழித்து மீண்டும் விசுவரூபம் எடுத்துள்ளது. 'களத்தில் பந்தின் தன்மையை மாற்றுவ தற்கு உப்புத்தாளால் அதை தேய்க்கும் திட்டம் குறித்து அணியில் உள்ள அனைவருக்கும் தெரியும். ஆனால் அப்போதைய கேப்டன் ஸ்டீவன் சுமித் துணை கேப்டன் டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோரை பலிகடாவாக்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தது. தவறானது' என முன்னாள் வீரர் உஸ்மான் கவாஜா தனது சுயசரிதை புத்தகத்தில் எழுதியுள்ளார். அவரது குற்றச்சாட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரையொட்டி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்சிடம் அந்த டெஸ்ட் தொடரில் விளையாடியவர் என்ற வகையில் இது பற்றி கேட்ட போது,
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை பொறுத்தவரை அது மிகவும் கடினமான காலம். இன்னும் சில வீரர்கள் மிகுந்த வேதனையில் இருப்பது தெரியும். ஆனால் எனது கதையை பகிர்ந்து கொள்ள இது சரியான தருணம் அல்ல. அந்த நினைவுகளை மீண்டும் கிளற விரும்பவில்லை.
கவாஜா தனது கிரிக்கெட் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொண்டதற்காகவும், அதை புத்தகமாக எழுதியதற்காகவும் அவரை மதிக்கிறேன். இதை பற்றி விமர்சிப்பதற்காக நான் இங்கு வரவில்லை. நாளைய (இன்று) ஒரு நாள் போட்டி மீதே எனது கவனம் உள்ளது' என்றார்.
இதற்கிடையே, பந்தை சேதப்படுத்திய சதி பற்றி பயிற்சியாளர் உள்பட ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் முன்கூட்டியே அறிவர் என்ற கவாஜாவின் பகீர் புகார் குறித்து ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இன்று விரிவாக பதில் அளிக்கிறார். சிட்னியில் இன்று செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக அவர் சமூக வலைதளம் மூலம் தெரிவித்துள்ளார்.