கிரிக்கெட்

50 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்தில் வரலாறு படைத்த கே.எல். ராகுல்... ஒரே சதத்தில் இரண்டு இமாலய சாதனைகள்

இது அவரது 13வது டெஸ்ட் சதமாகும்.

வெல்லிங்டன்,

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் கே.எல். ராகுல் சதம் அடித்து இரண்டு முக்கிய சாதனைகளை படைத்துள்ளார்.

சாதனை

நியூசிலாந்து மண்ணில் தனது முதல் டெஸ்ட் இன்னிங்ஸிலேயே சதமடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை ராகுல் பெற்றுள்ளார். இதற்கு முன்பு 1976ஆம் ஆண்டு இந்தியாவின் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின்போது சுனில் கவாஸ்கர் 116 ரன்களும், சுரீந்தர் அமர்நாத் 124 ரன்களும் எடுத்து இந்த சாதனையைப் படைத்திருந்தனர்.

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கே.எல். ராகுல் இந்த சாதனையை மீண்டும் நிகழ்த்தியுள்ளார்.

நான்கு நாடுகளிலும் சதம்

ராகுலின் இந்த சதம் மற்றொரு வரலாற்று சாதனையையும் சாத்தியமாக்கியுள்ளது. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு SENA நாடுகளிலும் டெஸ்ட் சதமடித்த முதல் இந்திய தொடக்க வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இந்த சாதனையைப் படைத்ததன் மூலம் நான்கு SENA நாடுகளிலும் டெஸ்ட் சதமடித்த எட்டாவது ஆசிய வீரராகவும், ஐந்தாவது இந்திய வீரராகவும் ராகுல் இடம்பிடித்துள்ளார். இது அவரது 13வது டெஸ்ட் சதமாகும்.

ஆசிய வீரர்கள்

நான்கு SENA நாடுகளிலும் டெஸ்ட் சதமடித்த ஆசிய வீரர்களின் பட்டியலில் முகமது அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், சயீத் அன்வர், ராகுல் டிராவிட், யூனிஸ் கான், குமார் சங்கக்கரா, விராட் கோலி ஆகியோருடன் தற்போது கே.எல். ராகுலும் இணைந்துள்ளார்.

மேலும், இந்த நான்கு நாடுகளிலும் தொடக்க வீரராக டெஸ்ட் சதமடித்த ஆசிய வீரர்களில் கே.எல். ராகுல் மற்றும் பாகிஸ்தானின் முன்னாள் தொடக்க வீரர் சயீத் அன்வர் ஆகிய இருவர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

வலுப்படுத்திய ராகுல்

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 368 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் நிதானமாகவும் சிறப்பாகவும் விளையாடி நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர்.

தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல், படிக்கல் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தது. படிக்கல் 80 ரன்களில் கைல் ஜேமிசன் பந்துவீச்சில் போல்டானார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் 290 பந்துகளில் 136 ரன்கள் (9 பவுண்டரி, 2 சிக்சர்) குவித்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் கேப்டன் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி 98 ரன்கள் எடுத்த நிலையில் ஜேக்கப் டபி பந்துவீச்சில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். தற்போது 3-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 486 ரன்கள் குவித்துள்ளது.

ரிஷப் பண்ட் 55 ரன்களுடனும் அன்ஷுல் கம்போஜ் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 118 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதால், 4-வது நாளில் மேலும் ரன்களைக் குவித்து நியூசிலாந்து அணிக்கு கடினமான இலக்கை நிர்ணயிக்க முயற்சிக்கும்.

SCROLL FOR NEXT