சென்னை,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடிய அந்த அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் தர்மசாலாவில் நடந்த முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், லக்னோவில் நடந்த 2-வது ஆட்டத்தில் 17 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- ஆப்கானிஸ்தான் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) பகல்-இரவு மோதலாக நடக்கிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் நேற்று தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.
மழையால் பாதிக்கப்பட்டு 25 ஓவர்களாக குறைக்கப்பட்ட முதல் ஆட்டத்தில் 195 ரன்கள் இலக்கை 22.5 ஓவரில் விரட் டிப்பிடித்த இந்தியா, 2-வது ஆட்டத்தில் 402 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. இரு ஆட்டத்திலும் கேப்டன் சுப்மன் கில் (84 மற்றும் 154 ரன்) ஆட்டநாயகனாக ஜொலித்தார். லக்னோ போட்டியில் இஷான் கிஷன் 125 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது. பவுலிங்கில் அர்ஷ்தீப்சிங், குர்னூர் பிரார் சிறப்பாக பந்து வீசியுள்ளனர். முந்தைய ஆட்டத்தில் அறிமுக பவுலராக அடியெடுத்து வைத்த பிரின்ஸ் யாதவ் 2 விக்கெட் வீழ்த்தினார். கால்முட்டி காயத்துக்கு ஆபரேஷன் செய்து குணமடைந்துள்ள வேகப்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் ஹர்ஷித் ராணா அணியில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படுவது சந்தேகமே.
அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என உதவி பயிற்சியாளர் ரையான் டென்டஸ்சாட் நேற்று தெரிவித்தார். அனேகமாக வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங்குக்கு ஓய்வு அளிக்கப்படலாம். அதே சமயம் தொடை வலியால் கடந்த ஆட்டத்தில் ஆடாத ஆல்-ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி திரும்புவார் என்று தெரிகிறது. மொத்தத்தில் பலம் வாய்ந்த இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி ஆறுதல் வெற்றிக்காக முயற்சிக்கும். மூன்று வடிவிலான போட்டியிலும் அந்த அணி ஒரு முறை கூட இந்தியாவை வீழ்த்தியது கிடையாது. சேப்பாக்கம் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணி ஏற்கனவே 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இரு ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் வெற்றியும் (பாகிஸ்தானுக்கு எதிராக), ஒன்றில் தோல்வியும் (நியூசிலாந்துக்கு எதிராக) அடைந்துள்ளது. அந்த அனுபவம் அவர்களுக்கு சற்று நம்பிக்கை அளிக்கும்.
இந்திய அணியை பொறுத்தவரை சேப்பாக்கத்தில் இதுவரை 15 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் 8-ல் வெற்றி யும், 6-ல் தோல்வியும் கண்டுள்ளது. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை. இந்திய அணி இங்கு கடைசியாக 2023-ம் ஆண் டில் ஆஸதிரேலியாவுக்கு எதிராக மோதி வெற்றி பெற்றிருந்தது நினைவு கூரத்தக்கது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில் (கேப்
டன்), இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர் அல்லது லோகேஷ் ராகுல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ்குமார் ரெட்டி, குல்தீப் யாதவ் அல்லது ஹர்ஷ் துபே, குர்னூர் பிரார், பிரின்ஸ் யாதவ், பிரசித் கிருஷ்ணா அல்லது அர்ஷ்தீப்சிங்.
ஆப்கானிஸ்தான்: ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன்,
செடிகுல்லா அடல், ரக்மத் ஷா. ஹஷ்மத்துல்லா ஷகிடி (கேப் டன்), முகமது நபி அல்லது டார்விஷ் ரசூலி, அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் அல்லது பிலால் சமி, ரஷித் கான், நங்கேயலா கரோட்டி, கசன்பார். முகமது சலீம்.
பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.