கொழும்பு,
பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை கைப்பற்றியது.
இதையடுத்து நடைபெற்ற 2 டி20 போட்டிகளிலும் இலங்கை வென்றது. இதன் மூலம் 2-0 என்ற புள்ளிகள் கணக்கில் டி20 தொடரையும் இலங்கை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய இலங்கை 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் சமரி அத்தப்பத்து அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார். அதேவேளை, சிறப்பாக பந்து வீசிய பாகிஸ்தான் அணியின் ரைசத் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 18.2 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இலங்கையை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது.
அதேவேளை, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.