லண்டன்,
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20, 1 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், டி20 தொடரை 2-1 என்ற புள்ளி கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 285 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக ஆடிய ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 83 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து வீராங்கனை சோபி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் ஆடிய இங்கிலாந்து 170 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் ஏமி ஜோன்ஸ் அதிகபட்சமாக 52 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக பந்து வீசிய இந்திய வீராங்கனை கிரந்தி கவுட் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 115 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 341 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. சிறப்பாக ஆடிய இந்திய அணியின் யாஸ்திகா பாட்டியா 113 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம் இங்கிலாந்துக்கு இந்தியா 457 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து, 457 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
இந்திய வீராங்கனைகளின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்து வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் நேற்றைய 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து 4ம் நாள் ஆட்டம் இன்று தொங்கியது. வெற்றிக்கு இன்னும் 327 ரன்கள் தேவை என்ற நிலையில் 4 விக்கெட்டுகள் மட்டும் கைசம் வைத்திருந்த இங்கிலாந்து அணி இன்றைய ஆட்டத்தின் தொடக்கத்திலேயே தடுமாறியது. இந்திய வீராங்கனைகளின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்து அணி 186 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனால் இங்கிலாந்தை 270 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றிபெற்றது. இங்கிலாந்து தரப்பில் அந்த அணியின் ஏமி ஜோன்ஸ் அதிகபட்சமாக 54 ரன்களை சேர்த்தார். இந்தியா தரப்பில் ஸ்நேஹ் ராணா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றிபெற்ற முதல் மகளிர் டெஸ்ட் அணி என்ற வரலாற்று சாதனையை இந்தியா பெற்றுள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் மகளிர் டெஸ்ட் போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.