ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் மிகப்பெரிய வீரர்கள் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாறியுள்ளார். அதேபோல், பஞ்சாப் அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறியுள்ளார். இந்த அதிரடியான வீரர்கள் பரிமாற்றத்தை ஐபிஎல் வரலாற்றிலேயே மிகப்பெரிய டிரேட் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
கடந்த எட்டு ஆண்டுகளாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த அர்ஷ்தீப் சிங்கை விடுவிப்பது மிகவும் கடினமான முடிவு.ஒரு இளம் வீரராக அணியில் இணைந்த அர்ஷ்தீப், இன்று இந்திய அணியின் முன்னணி இடதுகை வேகப்பந்துவீச்சாளராக வளர்ந்திருப்பதை நினைத்து மகிழ்ச்சி. அவரைப் போன்ற திறமையான வீரரைப் பிரிவது எளிதான விஷயமல்ல என்றும் கூறியுள்ளார். அவரது எதிர்காலத்திற்கு வாழ்த்துகள்.
மேலும், கிரிக்கெட் ரீதியாக அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல சில மாற்றங்கள் தேவைப்பட்டதாகவும், அந்த வகையில் ஹர்திக் பாண்டியாவை அணியில் இணைப்பது சரியான முடிவாக இருக்கும் என்று நிர்வாகம் கருதியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின்படி ஹர்திக் பாண்டியா ரூ.18 கோடி ஒப்பந்தத் தொகையில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். அர்ஷ்தீப் சிங்கும் ரூ.18 கோடி தொகையிலேயே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறியுள்ளார். இதனால் கூடுதல் பணப் பரிமாற்றம் இல்லாத நேரடி வீரர்கள் பரிமாற்றமாக இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.