லக்னோ
10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் லக்னோவில் இன்று நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது.
லக்னோ அணி 9 ஆட்டங்களில் ஆடி, ஐதராபாத், கொல்கத்தா அணிகளுக்கு எதிராக 2 வெற்றிகளை பெற்றுள்ளது. எனினும், 7 தோல்வியுடன் கடைசி இடத்தில் உள்ளது. தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் தோற்றுள்ள அந்த அணியின் 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து விட்டது.
பெங்களூரு அணி 9 ஆட்டங்களில் ஆடி, ஐதராபாத், சென்னை, மும்பை, லக்னோ, குஜராத், டெல்லி அணிகளுக்கு எதிராக 6 வெற்றிகளை பெற்றுள்ளது. 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 12 புள்ளிகள் பெற்றுள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5-ல் பெங்களூருவும், 2-ல் லக்னோவும் வெற்றி பெற்றுள்ளன. போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி லக்னோ முதலில் பேட்டிங் செய்தது.
லக்னோ அணி 9 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 95 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. பந்து வீச்சும் 19 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், மழை விட்டதும் லக்னோ அணி தொடர்ந்து ஆடியது. மிட்செல் மார்ஷ் 111 ரன்களும், அர்ஷின் குல்கர்னி 17 ரன்களும் எடுத்தனர். பூரன் 38 ரன்களில் வெளியேறினார். எனினும், கேப்டன் ரிஷப் பண்ட் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என 10 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அணி 200 ரன்களை கடக்க உதவினார்.
இதனால் லக்னோ அணி, நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவர்களில் 209 ரன்களை குவித்துள்ளது. பெங்களூரு அணிக்கு, டி.எல்.எஸ். முறைப்படி 213 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.