புதுடெல்லி,
மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் ரூ. 50 லட்சம் அடிப்படை விலையுடன் சோபி மோலினியூ, சோபியா டங்க்லி களமிறங்குகின்றனர்.
மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2027 தொடருக்கான வீராங்கனைகள் மினி ஏலம் வரும் 28-ம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் 27 இடங்களுக்கு 146 வீராங்கனைகள் போட்டியிட உள்ளனர்.
இந்த 146 வீராங்கனைகளில் 119 இந்திய வீராங்கனைகளும், 27 வெளிநாட்டு வீராங்கனைகளும் ஆவர்.
27 இடங்களில் 20 இடங்கள் இந்திய வீராங்கனைகளுக்கும், 7 இடங்கள் வெளிநாட்டு வீராங்கனைகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் ஆஸ்திரேலியாவின் சோபி மோலினியூ, இங்கிலாந்தின் சோபியா டங்க்லி ஆகியோர் அதிகபட்ச அடிப்படை விலையான ரூ.50 லட்சத்தில் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியால் விடுவிக்கப்பட்ட இந்திய வீராங்கனை ஜி. கமலினி, உத்தரப் பிரதேச வாரியர்ஸ் அணியால் விடுவிக்கப்பட்ட கிரண் நவ்கிரே ஆகியோர் ரூ.40 லட்சம் அடிப்படை விலையில் ஏலத்தில் பங்கேற்க உள்ளனர்.
ஏலத்தில் பங்கேற்கும் அணிகளில் உத்தரப் பிரதேச வாரியர்ஸ் அணி ரூ.3.65 கோடி கையிருப்புத் தொகையுடன் களமிறங்குகிறது. இந்த தொகையைப் பயன்படுத்தி அணிக்கு தேவையான வீராங்கனைகளை தேர்வு செய்ய அந்த அணி திட்டமிடும்.
இதனால் 28-ம் தேதி நடைபெறவுள்ள ஏலத்தில் எந்த வீராங்கனையை எந்த அணி வாங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.