கிரிக்கெட்

“எந்த போட்டியையும் நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை ” - ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரைத் தீர்மானிக்கும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக, ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளின் முக்கியத்துவம் குறித்து பேசியுள்ளார். “பெரும்பாலான டெஸ்ட் போட்டிகள் இறுதிப்போட்டி போன்ற உணர்வைத் தருகின்றன” என்று அவர் தெரிவித்துள்ளார்.

முதலிடத்தை இழக்கும் அபாயம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆனால், கெபெர்ஹாவில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 எனச் சமன் செய்தது.

தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலிலும், சர்வதேச டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையிலும் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. கேப்டவுனில் நடைபெறும் கடைசி டெஸ்டில் தோல்வியடைந்தால் இந்த இரு முதலிடங்களையும் இழக்கும் அபாயம் உள்ளது.

கவனம்

இந்நிலையில், ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி, தோல்வியின் விளைவுகள் குறித்து அதிகம் சிந்திப்பதைவிட, அடுத்த போட்டிக்கான தயாரிப்பில் கவனம் செலுத்துவதே முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ஒரு அணியாக எங்களால் என்ன செய்ய முடியும் என்பதில் உறுதியான நம்பிக்கை வைத்துள்ளோம். இந்தப் போட்டிக்கு பிறகு முதலிடத்தில் இருப்போமா, இல்லையா என்பதைவிட, எங்களால் என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்துகிறோம்” என்றார்.

ஒவ்வொரு போட்டியையும்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் ஒவ்வொரு போட்டியிலும் முக்கிய பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்ட கேரி, எந்த போட்டியையும் சாதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை என்றும் தெரிவித்தார்.

“எனக்குத் தெரிந்தவரை, பெரும்பாலான டெஸ்ட் போட்டிகள் இறுதிப்போட்டி போன்ற உணர்வை தருகின்றன. எந்த போட்டியையும் நாங்கள் அலட்சியமாக எடுத்துக்கொள்வதில்லை. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறவே விரும்புகிறோம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளின் முக்கியத்துவம் எங்களுக்குத் தெரியும். எனவே, ஒவ்வொரு போட்டியிலும் எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்துவது அவசியம்” என்று அவர் கூறினார்.

தொடரைத் தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட்

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை கேப்டவுனில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரையும் கைப்பற்றும் என்பதால் இரு அணிகளுக்கும் இது முக்கியமான ஆட்டமாக அமைந்துள்ளது.

SCROLL FOR NEXT