இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் வரலாற்றில் அழிக்க முடியாத தடத்தைப் பதித்துள்ளார். ஏறக்குறைய 2 தசாப்த காலம் நீடித்த அவரது ஐபிஎல் பயணத்தில் கேப்டன், விக்கெட் கீப்பர், அதிரடி பினிஷர் எனப் பல்வேறு பொறுப்புகளில் சாதனைகளைப் படைத்துள்ளார்.
தோனி ஐபிஎல் வரலாற்றில் அதிக போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மொத்தம் 235 போட்டிகளில் கேப்டனாக களமிறங்கியுள்ள அவர், அதில் 136 வெற்றிகளையும் 97 தோல்விகளையும் சந்தித்துள்ளார். 2 போட்டிகள் முடிவில்லாமல் போயுள்ளன. அவரது வெற்றி-தோல்வி விகிதம் 1.40 ஆகும். ரோகித் சர்மா 158 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ள நிலையில், தோனி முதலிடத்தில் நீடிக்கிறார்.
தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. மேலும், 2 முறை சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பையையும் கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் ஒரே அணிக்காக ஆண்கள் டி20 கிரிக்கெட்டில் 7 கோப்பைகளை வென்ற கேப்டன் என்ற சாதனையையும் படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சமாக 11 இறுதிப்போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு
விக்கெட் கீப்பராகவும் தோனி பல சாதனைகளைப் படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தல்களில் பங்களித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மொத்தம் 201 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்ய உதவியுள்ளார். இதில் 154 கேட்ச்களும், 47 ஸ்டம்பிங்களும் அடங்கும். விக்கெட் கீப்பராக விளையாடியபடியே கேப்டனாக 229 போட்டிகளில் செயல்பட்டுள்ளார். இந்த எண்ணிக்கையும் ஐபிஎல் சாதனையாகும்.
போட்டியின் கடைசி ஓவர்களில் அதிரடியாக ரன்கள் குவிப்பதில் தோனிக்கு தனி அடையாளம் உண்டு. ஐபிஎல் போட்டிகளில் 16 முதல் 20-வது ஓவர்கள் வரை அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் தோனி முதலிடத்தில் உள்ளார். இந்த ஓவர்களில் மட்டும் 197 இன்னிங்ஸ்களில் விளையாடி 3,468 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 174.97 ஆகும். இந்தப் பட்டியலில் கீரன் பொல்லார்டு 2,032 ரன்களுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் தோனி மொத்தம் 5,439 ரன்கள் குவித்துள்ளார். இதில் 96.39 சதவீத ரன்களை 4-வது இடம் அல்லது அதற்குக் கீழே களமிறங்கி எடுத்துள்ளார். 2018 மற்றும் 2019 சீசன்கள் அவரது சிறந்த பேட்டிங் காலகட்டமாக அமைந்தன. 2018-ல் 455 ரன்களும், 2019-ல் 416 ரன்களும் எடுத்தார். 2019 சீசனில் அவரது பேட்டிங் சராசரி 83.20 ஆக இருந்தது
ஐபிஎல் வரலாற்றில் தோனி மொத்தம் 278 போட்டிகளில் விளையாடியுள்ளார். 11 இறுதிப்போட்டிகளிலும், 28 பிளே-ஆப் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். 2023-ம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடியபோது 250 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார். 2025-ம் ஆண்டு குஜராத் அணிக்கு எதிராக கேப்டனாக விளையாடியபோது அவருக்கு வயது 43 ஆண்டுகள் 322 நாட்கள். ஐபிஎல் வரலாற்றில் கேப்டனாக விளையாடிய அதிக வயதுடைய வீரரும் அவர்தான்
வீரராக ஐபிஎல் பயணம் முடிவுக்கு வந்தாலும், கிரிக்கெட் உலகில் தோனி உருவாக்கிய சாதனைப் பயணம் என்றும் ரசிகர்களால் நினைவுகூரப்படும்.