கிரிக்கெட்

20 ஓவர் போட்டியில் டோனி இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும்: வி.வி.எஸ்.லட்சுமண்

20 ஓவர் போட்டியில் டோனி இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும் என்று முன்னாள் பேட்ஸ்மேன் வி.வி.எஸ்.லட்சுமண் தெரிவித்துள்ளார்.

ராஜ்கோட்,

ராஜ்கோட்டில் கடந்த சனிக்கிழமை நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 2வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 197 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இந்த ஆட்டத்தில் டோனி 37 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து கடைசி ஒவரில் ஆட்டம் இழந்தார். ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைப்பதில் வல்லவர் என்று அனைவராலும் அறியப்பட்ட தோனி, கடைசி கட்டத்தில் பந்துகளை அடித்து ஆடுவதில் சிறிது தடுமாறினார். இதனால்,தோனிக்கு எதிராக சில விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் விவிஎஸ் லட்சுமண், தோனியின் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்து உள்ளார். விவிஎஸ் லட்சுமண் கூறியிருப்பதாவது:-

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அடுத்த வாய்ப்பை தேட வேண்டிய தருணம் இதுவாகும். ஆட்ட இலக்குக்கு தகுந்தபடி டோனி அடித்து ஆடவில்லை. அவர் முதல் 9 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தார். அவரது நிதானமான ஆட்டத்தால் அணியின் உத்வேகம் நியூசிலாந்துக்கு சாதகமாக திரும்பியது.20 ஓவர் போட்டியில் டோனி இளைஞர்களுக்கு வழிவிட்டு ஒதுங்க வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன். அதற்கு அவர் முன்வர வேண்டும். ஒருநாள் போட்டியை பொறுத்தமட்டில் டோனி நிச்சயம் அணியில் இடம் பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT