கிரிக்கெட்

“தினமும் 1 மணி நேரம் இதற்காக ஒதுக்குங்கள்” - இளைஞர்களுக்கு தோனி கொடுத்த முக்கிய அறிவுரை

இன்றைய இளைஞர்களுக்கு என்ன அறிவுரை வழங்குவீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, இளைஞர்கள் தங்களது உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வதுடன், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களையும் பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உடல்நலத்திற்கு முக்கியத்துவம்

இந்திய அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கேப்டனாக செயல்பட்ட தோனியிடம், மன அழுத்தம், பதற்றம் மற்றும் சோர்வால் பாதிக்கப்படும் இன்றைய இளைஞர்களுக்கு என்ன அறிவுரை வழங்குவீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த தோனி, இளைஞர்கள் முதலில் தங்களது உடல்நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மாறிவரும் வாழ்க்கை முறை

அவர் பேசுகையில், ‘இந்தியர்களின் பாரம்பரிய உணவுகளில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கிறது. அதேபோல், முந்தைய தலைமுறையினரின் வாழ்க்கை முறையில் உடல் உழைப்பு அதிகமாக இருந்தது. ஆனால், தற்போதைய தலைமுறையினர் அதே உணவுப் பழக்கங்களைப் பின்பற்றினாலும், உடல் செயல்பாடுகள் வெகுவாக குறைந்துவிட்டது.

வீட்டிலிருந்து வெளியே சென்றதும் ஆட்டோ அல்லது காரில் பயணம் செய்வது, அலுவலகத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வது போன்ற பழக்கங்கள் உடல் இயக்கத்தை குறைத்துள்ளது’ என்றார்.

துரித உணவுகள்

மேலும், ‘இந்தியாவில் துரித உணவுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. சர்க்கரை அதிகமுள்ள உணவுகள் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது உடல்நலத்திற்கு ஏற்றதல்ல. குறிப்பாக, உடல் உழைப்பு குறைவாக இருப்பவர்கள் தங்களது உணவுப் பழக்கங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என்றார்.

பள்ளிப் பருவத்தில்

தொடர்ந்து. ’இளைஞர்கள் பள்ளிப் பருவத்திலிருந்தே பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்க வேண்டும். விளையாட்டில் திறமை இருந்தால், அதைக் கண்டறிந்து வளர்த்துக்கொள்ள வேண்டும். சிறு வயதிலிருந்தே விளையாட்டுகளில் ஈடுபடுவது, எதிர்காலத்தில் சிறந்த உடல்நலத்துடன் வாழ உதவும்’ என்றார்.

தினமும் ஒரு மணி நேரம்

மேலும், ‘குடும்பப் பொறுப்புகள், பெற்றோரைப் பராமரித்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்காகப் பணம் சம்பாதித்தல் எனப் பல்வேறு கடமைகள் இருந்தாலும், தங்களது உடல்நலத்திற்கும் நேரம் ஒதுக்குவது அவசியம். நாம் உடல்ரீதியாக ஆரோக்கியமாக இருந்தால், வாழ்க்கையிலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

தினமும் ஒரு மணி நேரத்தை உடற்பயிற்சிக்காக ஒதுக்குவதுடன், எளிமையான உணவுப் பழக்கங்களையும் பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்’ என்றார்.

SCROLL FOR NEXT