சென்னை,
தமிழக லெக் ஸ்பின்னர் முருகன் அஸ்வின் (Murugan Ashwin), உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்ச்சிபூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
"எனக்கு ஆறு வயது இருக்கும்போது நான் கிரிக்கெட் விளையாட தொடங்கினேன். அன்று முதல் இந்த விளையாட்டை ஆழமாக காதலித்து வருகிறேன். இன்று நான் இந்த நிலைக்கு இருப்பதற்கு காரணமே கிரிக்கெட் தான். இதுவரை எனது பயணம் அற்புதம் வாய்ந்தது, அதை கருத்தில் கொண்டு உங்கள் அனைவருடனும் ஒரு முக்கிய செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நான் உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் பயணத்தில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். எவ்வாறாயினும், நான் புதிய சவால்களையும் வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருவேன். எப்போதும்போல அதே உத்வேகத்துடன் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது ஐபிஎல் வாழ்க்கையில் 6 வெவ்வேறு அணிகளுக்காக முருகன் அஸ்வின் விளையாடி இருக்கிறார். ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் , டெல்லி டேர்டெவில்ஸ் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு , பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளில் விளையாடி உள்ளார். 3 நாட்களுக்கு முன்னதாக தமிழக ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர், அனைத்து வடிவ உள்ளூர் முதல் தர கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.