கிரிக்கெட்

'மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்க முதலில் தயங்கினேன்' - ரோஹித் சர்மா

மும்பை அணிக்கு ஆறாவது ஐபிஎல் கோப்பையை பெற்று தருவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

மும்பை,

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மா, இந்தப் பொறுப்பை ஏற்க முதலில் தயக்கம் காட்டியதாக தெரிவித்துள்ளார்.

ரோஹித்

2011-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த ரோஹித், 2013-ம் ஆண்டு கேப்டன் பொறுப்பை ஏற்றார். அவரது தலைமையில் மும்பை அணி 2013, 2015, 2017, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றது. இதன் மூலம் அந்த அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக ரோஹித் திகழ்ந்தார்.

கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய ரோகித்

2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்குப் பிறகு ரோகித்திடம் இருந்த கேப்டன் பொறுப்பு ஹர்திக் பாண்ட்யாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஹர்திக் தலைமையில் விளையாடிய மும்பை அணி, 2024-ம் ஆண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது. 2025-ம் ஆண்டு பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியபோதும், குவாலிபையர் 2-ல் தோல்வியடைந்தது. தொடர்ந்து 2026-ம் ஆண்டு தொடரில் 9-வது இடத்தைப் பிடித்தது.

இதற்கிடையில் டிரேட் மூலம் ஹர்திக் பாண்டியா பஞ்சாப் அணிக்கு சென்றநிலையில், மும்பை அணியின் புதிய கேப்டனாக மீண்டும் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

மீண்டும் தலைமை ஏற்க முடிவு செய்தது ஏன்?

இந்நிலையில், மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்க முதலில் விரும்பவில்லை என்று கூறிய ரோஹித் சர்மா, இதுகுறித்து தனது குடும்பத்தினரிடமும், அணியின் இணை உரிமையாளர் ஆனந்த் அம்பானியிடமும் ஆலோசித்ததாக தெரிவித்தார்.

பின்னர், அணியை நீண்ட காலமாக உருவாக்கி வழிநடத்திய அனுபவம் தனக்கு இருப்பதால், மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்க இதுவே சரியான நேரம் என்று முடிவு செய்ததாக கூறினார்.

கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் செயல்பாடு ஏமாற்றமளித்ததாக குறிப்பிட்ட ரோகித், வீரர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும் என்றும், அனைவரும் ஒன்றிணைந்து அணியாக செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் பழைய அதிரடி ஆட்டத்துக்குக் கொண்டு வருவதே தனது நோக்கம் என்றும் தெரிவித்தார்.

ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா வர்த்தக முறையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்துள்ளார். இதனால் 2027-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ரோஹித் தலைமையில் புதிய அணிக் கூட்டணியுடன் மும்பை களமிறங்க உள்ளது.

2011-ம் ஆண்டு முதல் மும்பை அணிக்காக விளையாடி வரும் ரோஹித், இதுவரை 281 ஐபிஎல் போட்டிகளில் 7,329 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதங்களும், 49 அரைசதங்களும் அடங்கும். 2027-ம் ஆண்டு மீண்டும் கேப்டனாகக் களமிறங்க உள்ள அவர், மும்பை அணிக்கு ஆறாவது ஐபிஎல் கோப்பையை பெற்று தருவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது

SCROLL FOR NEXT