கிரிக்கெட்

2-வது டெஸ்ட்: 7 விக்கெட்டுகளை வீழ்த்திய நசீர் கான் - ஜிம்பாப்வே 339 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் டிராவில் முடிந்தது.

ஷார்ஜா,

2-வது டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தானின் நசீர் கான் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜிம்பாப்வே அணியை 339 ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்தார்.

டெய்லர் சதம்

ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி ஷார்ஜாவில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் பிரையன் பென்னட் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து, தொடக்க வீரர்களாக இன்னசென்ட் கையா, பென் கர்ரன் களமிறங்கினர்.

இதில், சிறப்பாக விளையாடிய பென் கர்ரன் 44 ரன்கள் எடுத்தார். இன்னசென்ட் கையா 96 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய பிரெண்டன் டெய்லர், முதல் நாள் ஆட்ட முடிவில் 96 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் தனது சதத்தை நிறைவு செய்த டெய்லர், தொடர்ந்து விளையாடி 119 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

7 விக்கெட் வீழ்த்திய நசீர்

டெய்லரைத் தொடர்ந்து ஜிம்பாப்வே அணியின் மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை. இதனால் அந்த அணி 114.5 ஓவர்களில் 339 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆப்கானிஸ்தான் தரப்பில் அபாரமாகப் பந்துவீசிய நசீர் கான் மரூப்கில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜியாவுர் ரஹ்மான் ஷரீபி 2 விக்கெட்டுகளும், யாமின் அகமத்சாய் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்களுடன் விளையாடி வருகிறது.

SCROLL FOR NEXT