மெல்போர்ன்,
வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் அதிகரித்து வருவதால், சுழற்பந்து வீச்சு அழியும் கலையாக மாறி வருவதாகவும் நாதன் லயன் கவலை தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் நாதன் லயன் இடம்பெற வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. டிசம்பர் 9-ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தத் தொடருக்கான அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
39 வயதான லயன், இதுவரை 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 577 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலிய டெஸ்ட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஷேன் வார்ன், க்ளென் மெக்ராத் ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இந்நிலையில், இது குறித்து பேசிய லயன், அணியில் தனக்கான இடம் உறுதியானதாக இல்லாதது ஏமாற்றமளிப்பதாக குறிப்பிட்டார். நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் அணிகளின் போக்கு, வேகப்பந்துக்கு சாதகமான ஆடுகளங்கள் ஆகியவை சுழற்பந்து வீச்சாளர்களுக்கான வாய்ப்புகளை குறைத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், கிரிக்கெட்டில் இருக்கும் காலத்திலும், அதற்கு பிறகும் சுழற்பந்து வீச்சுக்காக குரல் கொடுப்பேன் என்று கூறினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக லயனின் செயல்பாட்டில் சரிவு காணப்படுகிறது. கடந்த 12 டெஸ்ட் போட்டிகளில் 39 விக்கெட்டுகளை சராசரி 29.38-ல் வீழ்த்தியுள்ளார். இந்த ஆண்டு மட்டும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட்டுகளை சராசரி 41.20-ல் எடுத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலியா 1-2 எனத் தோல்வியடைந்தபோது, லயன் ஆறு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். அதே தொடரில் தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மர் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் ஈர்த்தார்.
இதனால், நியூசிலாந்து தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் லயனுக்குப் பதிலாக மற்றொரு சுழற்பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்து முடிவு எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.