கிரிக்கெட்

வரலாற்று சிறப்புமிக்க டி20 போட்டி: லார்ட்ஸ் மைதானத்தில் வங்காளதேசத்துடன் மோதும் நேபாளம்

நேபாள அணி இந்த மைதானத்தில் விளையாடும் 2-வது டி20 போட்டியாகும்

கிரிக்கெட்டின் தாயகமாகக் கருதப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேபாளம் மற்றும் வங்காளதேச அணிகள் மோதும் டி20 சர்வதேசப் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை மேரிலிபோன் கிரிக்கெட் கிளப் (MCC) வெளியிட்டுள்ளது. அதன்படி, 2027-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. வங்காளதேச ஆண்கள் அணி லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடும் முதல் டி20 சர்வதேசப் போட்டி இதுவாகும். அதே நேரத்தில் நேபாள அணி இந்த மைதானத்தில் விளையாடும் 2-வது டி20 போட்டியாகும்

லார்ட்ஸ்

வங்காளதேச அணி 2027-ம் ஆண்டு மே மாதம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து லார்ட்ஸ் மைதானத்தில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெறுகிறது. இதனைத் தொடர்ந்து ஜூன் 3-ம் தேதி நேபாளத்துடன் டி20 போட்டியில் மோதுகிறது.

மேலும், MCC ஏற்பாட்டில் நடைபெறும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் நேபாள அணி ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுடனும் விளையாட உள்ளது. ஜூன் 1-ம் தேதி ஸ்காட்லாந்துடன் 50 ஓவர் போட்டியிலும், ஜூன் 6-ம் தேதி அயர்லாந்துடன் 50 ஓவர் போட்டியிலும் மோதுகிறது. தொடர்ந்து ஜூன் 9, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் அயர்லாந்துக்கு எதிராக மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது

இந்தப் போட்டி நடைபெறும் ஜூன் 3-ம் தேதியே லார்ட்ஸ் மைதானத்தில் மிடில்செக்ஸ் அணியின் டி20 பிளாஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் சர்வதேச ஆண்கள் கிரிக்கெட் போட்டியும், உள்ளூர் டி20 போட்டியும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நேபாளம் மற்றும் வங்காளதேச கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT