கிறைஸ்ட்சர்ச்,
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி புதிய உலக சாதனை படைத்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் 200 வெற்றிகளைப் பதிவு செய்த முதல் அணியாக இந்தியா உருவெடுத்துள்ளது.
சிறப்பம்சமாக, இந்திய அணி தனது 300-வது சர்வதேச டி20 போட்டியில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது. கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 181 ரன்கள் இலக்கை ஒரு பந்து மீதமிருக்க எட்டிய இந்தியா, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா இதுவரை விளையாடிய 300 சர்வதேச டி20 போட்டிகளில் 200-ல் வெற்றி பெற்றுள்ளது. 83 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. 7 போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. 10 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை.
இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் 304 போட்டிகளில் 176 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து 135 வெற்றிகளுடனும், தென் ஆப்பிரிக்கா 129 வெற்றிகளுடனும், இங்கிலாந்து 128 வெற்றிகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கிளென் பிலிப்ஸ் 70 ரன்களும், பெவன் ஜேக்கப்ஸ் 58 ரன்களும் குவித்தனர்.
இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. மிட்செல் சான்ட்னரின் சுழற்பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 15 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து தடுமாறியது.
இந்திய அணி தோல்வியைசந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டபோது, திலக் வர்மா மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி இணைந்து அதிரடியாக விளையாடினர். இருவரும் ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர்.
திலக் வர்மா 26 பந்துகளில் 51 ரன்களும், நிதீஷ் குமார் ரெட்டி 13 பந்துகளில் 26 ரன்களும் எடுத்தனர். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.