நியூ சண்டிகர்,
குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய வைபவ் சூர்யவன்ஷி, 16 பந்துகளில் அரைசதத்தை கடந்து அசத்தினார். ஐதராபாத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் அவர் சிதறடித்தார். பேட் கம்மின்ஸ் வீசிய 3-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார்.
ஐபிஎல் தொடரில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனைக்கு கிறிஸ் கெயில் (30 பந்துகள்) சொந்தக்காரராக இருந்து வருகிறார். இந்நிலையில், சூர்யவன்ஷி 28 பந்துகளில் 97 ரன்கள் எடுத்திருந்தார். கிறிஸ் கெயிலின் சாதனையை சூர்யவன்ஷி முறியடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரபுல் ஹின்ஜ் வீசிய பந்தில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதனால் சாதனை படைக்கும் வாய்ப்பை சூர்யவன்ஷி நூலிழையில் தவறவிட்டார்.
எனினும், கிறிஸ் கெயிலின் மற்றொரு சாதனையை சூர்யவன்ஷி முறியடித்துள்ளார். நடப்பு தொடரில் சூர்யவன்ஷியின் சிக்சர் எண்ணிக்கை 65-ஆக (15 ஆட்டம்) உள்ளது. இதன் மூலம் ஐ.பி.எல்.-ல் ஒரு சீசனில் அதிக சிக்சர் நொறுக்கியவர் என்ற புதிய வரலாறு படைத்தார். இதற்கு முன்பு 2012-ம் ஆண்டில் கிறிஸ் கெய்ல் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக 15 ஆட்டங்களில் 59 சிக்சர் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. அவரது 14 ஆண்டு கால சாதனைக்கு சூர்யவன்ஷி முடிவு கட்டியுள்ளார்.
இந்த நிலையில், ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக சிக்ஸர் அடித்து, தனது சாதனையை முறியடித்த வைபவ் சூரியவன்ஷியை 'நியூ சிக்ஸ் மிஷின்' என புகழ்ந்து இன்ஸ்டாகிராமில் கிறிஸ் கெய்ல் ஸ்டோரி வைத்துள்ளார். மேலும், ’அதிவேக சதம் விளாசிய எனது சாதனையை கூட ஒருநாள் நீ முறியடிப்பாய்’ என சூரியவன்சிக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.