புதுடெல்லி,
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் நமன் திர், வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி முதல்முறையாக இடம் பிடித்துள்ளனர்.
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி, வருகிற 27-ந் தேதி முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் வருகிற 27-ந் தேதியும், 2-வது ஒருநாள் போட்டி கவுகாத்தியில் 30-ந் தேதியும், 3-வது ஒருநாள் போட்டி சண்டிகாரில் அக்டோபர் 3-ந் தேதியும் நடக்கிறது.
இதைத்தொடர்ந்து முதலாவது 20 ஓவர் போட்டி லக்னோவில் அக்டோபர் 6-ந் தேதியும், 2-வது போட்டி ராஞ்சியில் 9-ந் தேதியும், 3-வது போட்டி இந்தூரில் 11-ந் தேதியும், 4-வது போட்டி ஐதராபாத்தில் 14-ந் தேதியும், 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் பெங்களூருவில் 17-ந் தேதியும் நடக்கிறது.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடருக்கான இந்திய அணி நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி எதிர்பார்த்தபடி இடத்தை தக்கவைத்துள்ளனர். காயம் காரணமாக ஐ.பி.எல்.-க்கு பிறகு எந்தவொரு போட்டியிலும் ஆடாத ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. 2-வது விக்கெட் கீப்பர் இடத்தை துருவ் ஜூரெல் தட்டிச் சென்றுள்ளார்.
ஆல்-ரவுண்டர் நமன் திர், வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி ஆகியோர் முதல் முறையாக தேசிய அணிக்கு அழைக்கப்பட்டு இருக்கின்றனர். சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 8 மாத இடைவெளிக்கு பிறகு ஒருநாள் அணிக்கு திரும்பி இருக்கிறார்.
ஆசிய விளையாட்டு போட்டிக்கான அணியில் இடம் பிடித்திருந்த ஆல்-ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி விடுவிக்கப்பட்டு ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
20 ஓவர் போட்டி அணியில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆசிய விளையாட்டு போட்டிக்கான அணியில் இடம் பிடித்தவர்கள் பெரும்பாலும் அப்படியே தொடருகிறார்கள். ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தாக்குர், விப்ராஜ் நிகம் ஆகியோருக்கு பதிலாக பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி தேர்வாகியுள்ளனர்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள், 20 ஓவர் தொடருக்கான இந்திய அணி வருமாறு:-
ஒருநாள் போட்டி அணி:
சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், லோகேஷ் ராகுல் (துணை கேப்டன்), துருவ் ஜூரெல், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், முகமது சிராஜ், ஆகிப் நபி, ஜெய்ஸ்வால், நமன் திர்.
20 ஓவர் அணி:
ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், திலக் வர்மா (துணை கேப் டன்), ஷிவம் துபே, குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர்,ரவி பிஷ்னோய், நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ்.