ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக வீரர்கள் பரிமாற்றம் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணி தனது முக்கிய வீரர்களான அக்சர் படேல் மற்றும் அஷுதோஷ் சர்மா ஆகியோரை வேறு அணிகளுக்கு மாற்றும் திட்டம் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், தனது வீரர்கள் பரிமாற்ற நடவடிக்கைகளையும் டெல்லி அணி முடித்துக்கொண்டுள்ளது.
அக்சர் படேல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறலாம் என்றும், அஷுதோஷ் சர்மாவை மற்ற அணிகள் வாங்க ஆர்வம் காட்டுவதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த இரண்டு வீரர்களையும் டெல்லி அணி தக்கவைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் அணியைப் பொறுத்தவரை எந்த வீரர் பரிமாற்றமும் நடைபெறாது” என்று அணிக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.
2026 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக அக்சர் படேல் செயல்பட்டார். அந்தத் தொடரில் பேட்டிங்கில் அவர் எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் குவிக்கவில்லை. 14 போட்டிகளில் 173 ரன்கள் எடுத்தார். அவரது சராசரி 19.22 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 131.06 ஆகவும் இருந்தது.
இருப்பினும், பந்துவீச்சில் 13 இன்னிங்ஸ்களில் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணிக்கு உதவினார். அவரது எகானமி 8.18 ஆக இருந்தது.
மறுபுறம், அஷுதோஷ் சர்மா மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடும் திறன் கொண்ட வீரராகத் திகழ்கிறார். 2026 ஐபிஎல் தொடரில் எட்டு போட்டிகளில் விளையாடிய அவர், 171 ரன்கள் எடுத்தார். குறிப்பாக 181.91 என்ற ஸ்ட்ரைக் ரேட் அவரது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதனால் அவரை மற்ற அணிகள் தங்களது அணியில் சேர்க்க ஆர்வம் காட்டியதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், டெல்லி அணி அவரைத் தக்கவைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது.
அக்சர் படேல் அணியில் தொடர்ந்து இடம்பெறுவது உறுதியாகியுள்ள நிலையில், 2027 ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த சீசனில் அக்சர் படேல் அணியை வழிநடத்தினார். தற்போது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து ரிஷப் பண்ட் மீண்டும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குத் திரும்பியுள்ளார். இதனால் அவர் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
மேலும், கே.எல்.ராகுலும் கேப்டன் பொறுப்புக்கான மற்றொரு தேர்வாக உள்ளார். எனினும், 2027 சீசனுக்கான கேப்டன் குறித்து டெல்லி அணி இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. அக்சர் அணியில் தக்கவைக்கப்பட்டிருப்பது அவரே கேப்டனாகத் தொடர்வார் என்பதற்கான உறுதி அல்ல.
ஏற்கெனவே டெல்லி கேபிடல்ஸ் அணி இரண்டு வீரர் பரிமாற்றங்களை முடித்துள்ளது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து ரிஷப் பண்ட் டெல்லி அணிக்குத் திரும்பிய நிலையில், குல்தீப் யாதவ் லக்னோ அணிக்குச் சென்றுள்ளார்.
அதேபோல், டி.நடராஜன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்குச் சென்றுள்ளார். அவருக்குப் பதிலாக லெக் ஸ்பின்னர் ஜீஷன் அன்சாரி டெல்லி அணியில் இணைந்துள்ளார்.