மும்பை,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒரு நாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் டாப்-10 இடங்களில் மாற்றமில்லை. இந்தியாவின் சுப்மன் கில் முதலிடத்திலும், ரோகித் சர்மா 2-வது இடத்திலும், பாகிஸ்தானின் பாபர் அசாம் 3-வது இடத்திலும், இந்தியாவின் விராட் கோலி 4-வது இடத்திலும், டேரில் மிட்செல் (நியூசிலாந்து) 5-வது இடத்திலும் உள்ளனர். மற்றொரு இந்திய வீர்ரான ஸ்ரேயாஸ் ஐயர் 8-வது இடத்தில் உள்ளார்.
இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் அடித்த இலங்கை தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா 7 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தை பிடித்துள்ளார். ஜிம்பாப்வேயின் சிகந்தர் ராசா 9 இடங்கள் எகிறி 22-வது இடத்தை பெற்றுள்ளார்.
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். முன்னதாக மகரஜும் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தீக்ஷனாவும் முதலிடத்தை பகிர்ந்து இருந்தனர். இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் 4 விக்கெட்டுகளை கபளீகரம் செய்ததன் மூலம் கேஷவ் மகராஜ் தனியாக முதலிடத்தை ஆக்கிரமித்துள்ளார். தீக்ஷனா 2-வது இடத்திலும், இந்தியாவின் குல்தீப் யாதவ் 3-வது இடத்திலும் இருக்கிறார்கள். ரவீந்திர ஜடேஜா ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தில் உள்ளார்.
ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா இரு இடங்கள் அதிகரித்து முதல்முறையாக நம்பர் 1 அந்தஸ்தை எட்டியுள்ளார். இலங்கைக்கு எதிரான இரண்டு ஒரு நாள் போட்டிகளில் அரைசதம் (92 மற்றும் 59 ரன்) விளாசிய அவர், ஒரு விக்கெட்டும் எடுத்ததன் மூலம் இந்த ஏற்றம் கிடைத்துள்ளது.
இதுவரை முதலிடத்தில் இருந்த ஆப்கானிஸ்தானின் அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் (296 புள்ளி) 2-வது இடத்துக்கு இறங்கினார். முகமது நபி 2-ல் இருந்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்திய தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 9-வது இடம் வகிக்கிறார்.