கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் - சதத்தை தவறவிட்ட ஷகீல்... 434 ரன்களில் டிக்ளேர் செய்த பாகிஸ்தான்

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

ராவல்பிண்டி,

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 434 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. சவுத் ஷகீல் 93 ரன்களும், அறிமுக வீரர் அரபாத் மின்ஹாஸ் 52 ரன்களும் எடுத்து அசத்தினர்.

முதல் நாளில் 4 அரைசதங்கள்

பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர் தய்யப் ஆரிப் அதிரடியான தொடக்கம் கொடுத்தார். அவர் 51 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க வீரர் அசான் அவைஸ் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் 58 பந்துகளில் 50 ரன்களும், முகமது தாஹா 105 பந்துகளில் 51 ரன்களும் எடுத்தனர். இதற்கிடையே சவுத் ஷகீலும் அரைசதம் அடித்து 57 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 67.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்திருந்தது.

93 ரன்களில் சதத்தை தவறவிட்ட ஷகீல்!

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. தொடக்கத்தில் சவுத் ஷகீலுடன் இணைந்து விளையாடிய விக்கெட் கீப்பர் காஜி கோரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இருவரும் இணைந்து 6-வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய கோரி 48 ரன்களில் ஆட்டமிழந்து தனது முதல் டெஸ்ட் அரைசதத்தை 2 ரன்களில் தவறவிட்டார்.

மறுமுனையில் நிதானமாக விளையாடிய ஷகீல் சதத்தை நெருங்கினார். ஆனால் அவர் 199 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய அறிமுக வீரர் அரபாத் மின்ஹாஸ் அதிரடியாக விளையாடி 72 பந்துகளில் 52 ரன்கள் விளாசினார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 106.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 434 ரன்கள் எடுத்திருந்தபோது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

தொடக்கத்திலேயே அதிர்ச்சி

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணிக்கு தொடக்கத்திலேயே பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர்.

முகமது அப்பாஸ், பசிந்து சூரியபண்டாராவை ஆட்டமிழக்க செய்தார். தொடர்ந்து சாகிப் கான், தினேஷ் சந்திமாலை வெளியேற்றினார்.

தொடர்ந்து இலங்கை அணி 9 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 38 ரன்களுடன் விளையாடி வருகிறது.

SCROLL FOR NEXT