கிரிக்கெட்

பாகிஸ்தான் சூப்பர் லீக் 2027: முதல் போட்டியை நடத்தும் பெஷாவர் – 12 ஆண்டுகால காத்திருப்புக்கு முடிவு

முதல்முறையாக பெஷாவர் நகரம் போட்டிகளை நடத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.

பெஷாவர்,

பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தை பெஷாவர் நகரில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பி.எஸ்.எல். தொடர் வரலாற்றில் முதல்முறையாக பெஷாவர் நகரம் போட்டிகளை நடத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.

பி.எஸ்.எல்.

2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பி.எஸ்.எல். தொடரின் முதல் 11 சீசன்களிலும் பெஷாவரில் எந்தப் போட்டியும் நடத்தப்படவில்லை. அந்த நகரைச் சேர்ந்த பெஷாவர் சல்மி அணி தொடக்கம் முதலே இந்தத் தொடரில் விளையாடி வந்தாலும், சொந்த மண்ணில் விளையாடும் வாய்ப்பு அந்த அணிக்கு கிடைக்காமல் இருந்தது. தற்போது 12 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு பெஷாவர் ரசிகர்கள் தங்கள் நகரிலேயே பி.எஸ்.எல். போட்டிகளை நேரில் காணும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

பாகிஸ்தான் சூப்பர் லீக்

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி கூறுகையில், பெஷாவர் நகரில் பி.எஸ்.எல். தொடரின் தொடக்க விழாவும் முதல் போட்டியும் நடைபெறும் என்று அறிவித்தார். மேலும், தொடரின் பல்வேறு ஆட்டங்களும் அங்கு நடத்தப்படும் என்று தெரிவித்தார். பெஷாவர் நகரம் கிரிக்கெட்டுக்கு அளித்து வரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், அங்குள்ள ரசிகர்களுக்கு சொந்த மண்ணில் சர்வதேச தரத்திலான டி20 போட்டிகளைக் காணும் வாய்ப்பை வழங்கும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பி.எஸ்.எல். தலைமை செயல் அதிகாரி சல்மான் நசீர் கூறுகையில், பெஷாவர் ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த கனவு தற்போது நனவாகியுள்ளது என்றும், இந்த நகரத்தை 6-வது போட்டி நடத்தும் இடமாக இணைத்திருப்பது பி.எஸ்.எல். தொடரின் வளர்ச்சியில் முக்கியமான நடவடிக்கை என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே பெஷாவரில் உள்ள கிரிக்கெட் மைதானத்துக்கு மீண்டும் ஆர்பாப் நியாஸ் ஸ்டேடியம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் கடைசியாக 2006-ம் ஆண்டு சர்வதேச போட்டி நடைபெற்றது. தற்போது பி.எஸ்.எல். போட்டிகள் நடத்தப்பட உள்ளதால், அந்த நகரில் மீண்டும் உயர்மட்ட கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

SCROLL FOR NEXT