ராவல்பிண்டி,
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு இலங்கை அணி 114 ரன்கள் எடுத்துள்ளது.
ராவல்பிண்டி மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று 2-வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு சவுத் ஷகீலும், விக்கெட் கீப்பர் காஜி கோரியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிதானமாக விளையாடிய ஷகீல் சதத்தை நெருங்கினார். ஆனால், 199 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். இதனால் 7 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.
மறுமுனையில் சிறப்பாக விளையாடிய காஜி கோரி 72 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன் மூலம் தனது முதல் டெஸ்ட் அரைசதத்தை 2 ரன்களில் தவறவிட்டார்.
தொடர்ந்து களமிறங்கிய அறிமுக வீரர் அரபாத் மின்ஹாஸ் அதிரடியாக விளையாடி 72 பந்துகளில் 52 ரன்கள் விளாசினார். பாபர் அசாம் 50 ரன்களும், முகமது தாஹா 51 ரன்களும், தய்யப் ஆரிப் 57 ரன்களும் எடுத்தனர்.
இதனால் பாகிஸ்தான் அணி 106.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 434 ரன்கள் எடுத்திருந்தபோது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணிக்கு பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர். தொடக்க வீரர் பசிந்து சூரியபண்டாரா ரன் எதுவும் எடுக்காமல் முகமது அப்பாஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சாகிப் கான், லஹிரு உடாரா (42), தினேஷ் சந்திமால் (1) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
2-வது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 27.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்துள்ளது. கமிந்து மெண்டிஸ் 40 ரன்களுடனும், தனஞ்செய டி சில்வா 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தானைவிட 320 ரன்கள் பின்தங்கியுள்ள இலங்கை அணி, 3-வது நாளில் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.