இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது. ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தில் வெறும் 13 ஓவர்களிலேயே 90 ரன்கள் என்ற இலக்கை எட்டி பாகிஸ்தான் வெற்றியைப் பதிவு செய்தது. கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபருக்குப் பிறகு பாகிஸ்தான் அணி வென்ற முதல் டெஸ்ட் தொடராக இது அமைந்துள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். முகமது அப்பாஸ், அமீர் ஜமால் மற்றும் ரெசாவுல்லா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இலங்கை பேட்டிங் வரிசையைச் சரித்தனர்.
இலங்கை அணியின் கேப்டன் குசல் மெண்டிஸ் அதிகபட்சமாக 32 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் எடுக்கத் தவறியதால் இலங்கை அணி 35.3 ஓவர்களில் வெறும் 98 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதற்கு பதிலடியாக விளையாடிய பாகிஸ்தான் அணியும் தொடக்கத்தில் சில விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் அசான் அவைஸ், தய்யப் ஆரிப் மற்றும் காசி கோரி உள்ளிட்ட வீரர்களின் பங்களிப்பால் 325 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமாரா சிறப்பாகப் பந்துவீசி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி ஓரளவுக்கு சிறப்பாக விளையாடியது. தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், குசல் மெண்டிஸ், சோனால் தினுஷா மற்றும் மிலன் ரத்நாயக்க ஆகியோர் அரைசதம் அடித்து அணியை மீட்டனர்.இலங்கை அணி 95 ஓவர்களில் 316 ரன்களில் ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ் மற்றும் அமீர் ஜமால் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
90 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பத்தில் சிறிய அதிர்ச்சி ஏற்பட்டது. தய்யப் ஆரிப் 13 ரன்களிலும், முகமது தாஹா 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஆனால் நான்காவது வரிசையில் களமிறங்கிய அமீர் ஜமால் அதிரடியாக விளையாடி இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தார்.
வெறும் 22 பந்துகளைச் சந்தித்த அவர், 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் அசான் அவைஸ் 36 பந்துகளில் 32 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 13 ஓவர்களில் 90 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.