டோக்கியோ,
ஜப்பானின் ஐச்சி–நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஆடவர் குண்டு எறிதல் F46 பிரிவில் இந்தியா தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களையும் வென்று அசத்தியுள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் மூவரும் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருப்பது நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் தருணமாக அமைந்துள்ளது.
இந்தப் பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் சச்சின் சர்ஜேராவ் கிலாரி, தனது இறுதி முயற்சியில் 15.87 மீட்டர் தூரம் குண்டு எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் முந்தைய போட்டிச் சாதனையான 15.67 மீட்டரை முறியடித்து புதிய ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிச் சாதனையைப் படைத்தார். ஏற்கெனவே 2023ஆம் ஆண்டு ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றிருந்த அவர், தற்போது மீண்டும் தங்கம் வென்று தனது பட்டத்தைத் தக்கவைத்துள்ளார். மேலும், 2024 பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் இந்தியாவின் முகமது யாசர், 15.06 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். மற்றொரு இந்திய வீரரான பிரவீன், 14.94 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதன் மூலம் போட்டியின் மூன்று பதக்கங்களும் இந்தியாவிற்கே கிடைத்துள்ளன.