ஆஸ்திரேலிய கிரிக்கெட்டையே உலுக்கிய 2018-ம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரம் (Sandpapergate) மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கேப் டவுன் டெஸ்ட் போட்டியில் பந்தை சாண்ட்பேப்பர் பயன்படுத்தி சேதப்படுத்திய சம்பவத்தில் தற்போது புதிய குற்றச்சாட்டுகளை ஆஸ்திரேலிய முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கேமரூன் பான்கிராஃப்ட் முன்வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் பான்கிராஃப்ட் ஆகிய மூன்று வீரர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த அணிக்கும் இந்தச் சம்பவம் குறித்து தெரிந்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், அப்போது நடைபெற்ற விசாரணையின்போது முக்கியமான சில தகவல்களைத் தான் முழுமையாகத் தெரிவிக்கவில்லை என்றும், அணியின் மற்ற வீரர்களைப் பாதுகாக்கும் நோக்கில் சில விவரங்களை மறைத்ததாகவும் கூறியுள்ளார்
பான்கிராப்டின் இந்தக் குற்றச்சாட்டுகளில் குறிப்பாக அப்போதைய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களான பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோருக்கும் பந்து எவ்வாறு சேதப்படுத்தப்படுகிறது என்பது குறித்து தெரிந்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். பந்தின் ரிவர்ஸ் ஸ்விங் குறித்து அணிக்குள் விவாதங்கள் நடைபெற்றதாகவும், டேவிட் வார்னர்தான் சாண்ட்பேப்பரைப் பயன்படுத்தும் திட்டத்தை முன்மொழிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தன்னை மட்டுமே குற்றவாளியாக்கி மற்றவர்கள் தப்பித்துவிட்டதாகவும், அதன் காரணமாகத் தனது கிரிக்கெட் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பாட் கம்மின்ஸ் தரப்பிலிருந்து அவரது மேலாளர் நீல் மேக்ஸ்வெல் பதிலளித்துள்ளார். பான்கிராஃப்ட் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், ஏற்கெனவே பாட் கம்மின்ஸ் தனது செய்தியாளர் சந்திப்பில் பதிலளிக்காத எந்தப் புதிய விஷயமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், பான்கிராஃப்ட் அனுபவித்த துயரங்களுக்குத் தாங்கள் வருத்தப்படுவதாகவும், இருப்பினும் கம்மின்ஸ் தனது நிலைப்பாட்டை ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். 2018-ம் ஆண்டு பந்தை சேதப்படுத்துவதற்காக மைதானத்திற்குள் சாண்ட்பேப்பர் கொண்டு செல்லப்படுவது குறித்து தனக்குத் தெரியாது என்று கம்மின்ஸ் ஏற்கெனவே திட்டவட்டமாக மறுத்திருந்தார். தற்போது வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பிறகும் அவரது தரப்பு அதே நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.