கிரிக்கெட்

2027 உலகக் கோப்பை அக்டோபர் 2-ல் தொடங்க திட்டம்

அட்டவணையை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பை,

2027-ம் ஆண்டு நடைபெற உள்ள ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை அக்டோபர் 2-ம் தேதி, காந்தி ஜெயந்தி நாளில் தொடங்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாத்மா காந்தியின் அமைதி மற்றும் அகிம்சை கொள்கைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், தென்னாப்பிரிக்காவுடன் காந்திக்கு இருந்த வரலாற்றுத் தொடர்பை நினைவுகூரும் வகையிலும் இந்த தேதியை தேர்வு செய்ய பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 2027 உலகக் கோப்பையை தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

ஆரம்பகட்ட திட்டத்தில் அக்டோபர் 8-ம் தேதி போட்டிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பயிற்சி போட்டிகளை முன்னதாக நடத்தி, முக்கிய தொடரை அக்டோபர் 2-ம் தேதி தொடங்கும் வகையில் அட்டவணையை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதிப்போட்டி நவம்பர் 21-ம் தேதி நடைபெற வாய்ப்புள்ளது. எனினும், அக்டோபர் 2 தொடக்க தேதி குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்னும் அதிகாரப்பூர்வமாக இறுதி அறிவிப்பை வெளியிடவில்லை.