சென்னை,
13 நாடுகள் பங்கேற்கும் ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட்போட்டிக்கான சின்னம் மற்றும் சீருடையை பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து அறிமுகம் செய்தார்.
தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் சார்பில், இந்திய டென்னிஸ் பந்து சம்மேளனத்தின் ஆதரவுடன் ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி சென்னையை அடுத்த காரப்பாக்கத்தில் உள்ள கே.சி.ஜி. கல்லூரியில் அடுத்த மாதம் (அக்டோபர்) 26-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடக்கிறது.
தமிழ்நாட்டில் முதல்முறையாக நடக்கும் இந்த போட்டியில் இந்தியா, மலேசியா, தாய்லாந்து, வங்காளதேசம், சிங்கப்பூர், உஸ்பெகிஸ்தான், மாலத்தீவு, பூடான், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத் ஆகிய 13 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி அடுத்த ஆண்டு சுவீடனில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.
இந்த போட்டிக்கான சின்னம் (லோகோ) மற்றும் இந்திய அணியின் சீருடை (ஜெர்சி) அறிமுக நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள ஓட்டலில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, போட்டி சின்னம் மற்றும் சீருடையை அறிமுகம் செய்து வைத்தார்.
அவர் பேசுகையில், "டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம், சர்வதேச போட்டிகளை நடத்தி வீரர்களின் திறமையை வளர்ப்பதுடன், நமது வீரர்களின் வருங்கால வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் சுமார் 300 பேருக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்து இருப்பது பாராட்டுக்குரிய விஷயமாகும். இதுபோன்ற போட்டிகளை தொடர்ந்து நடத்தி அதிக அளவிலான வீரர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்' என்றார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய டென்னிஸ் பந்து கிரிக்கெட் சம்மேளன தலைவர் அபினவ் நாத் திவாரி, பொதுச்செயலாளர் இம்ரான் அகமது, தமிழ்நாடு டென்னிஸ் பந்து சங்க செயலாளர் ஞானவேல், இணை செயலாளர் தங்கராஜ், ஆசிய போட்டி அமைப்பு குழுவின் தலைவர் ஏ.சிவராமன், இயக்குனர் முனிரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் சிந்து நிருபர்களிடம் கூறுகையில், 'ஒன்றரை ஆண்டுக்கு பிறகு ஜப்பான் ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றி எனது அடுத்த கட்ட முயற்சிகளுக்கு உத்வேகம் அளிக்கும். ஆசிய விளையாட்டு போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகிறேன்' என்றார்.