கிரிக்கெட்

606 விக்கெட்டுகள்... தென் ஆப்பிரிக்க ஜாம்பவானை முந்திய காகிசோ ரபாடா

தென் ஆப்பிரிக்க வீரர்களில் அதிக சர்வதேச விக்கெட்டுகள் எடுத்தவர்களின் பட்டியலில் ரபாடா 4-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஜோகன்னஸ்பர்க்,

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா புதிய சாதனை படைத்தார்.

ஆலன் டொனால்டை முந்திய ரபாடா

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு தொடக்கத்திலேயே தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா நெருக்கடி கொடுத்தார். அறிமுக வீரர் மஹ்பிஜுல் இஸ்லாம் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். மொமினுல் ஹக்கும் ரன் எடுக்காமல் வெளியேறினார். கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் வங்காளதேச அணி 22 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து ரபாடா மேலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து, டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை சர்வதேசப் போட்டிகளையும் சேர்த்து ரபாடா எடுத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 606 உயர்ந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்டின் 602 விக்கெட்டுகள் சாதனையை அவர் முந்தினார். மேலும், தென் ஆப்பிரிக்க வீரர்களில் அதிக சர்வதேச விக்கெட்டுகள் எடுத்தவர்களின் பட்டியலில் ரபாடா 4-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

18-வது 5 விக்கெட் சாதனை

இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ரபாடா தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 18-வது முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்தார். இந்தச் சாதனை பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் மகாயா நிடினியுடன் 3-வது இடத்தை பகிர்ந்துள்ளார். டொனால்டு 20 முறையும், டேல் ஸ்டெய்ன் 26 முறையும் இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT