கிரிக்கெட்

4 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

ஜமைக்கா,

இலங்கையை வீழ்த்தி 4 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் வென்றுள்ளது.

இரண்டாவது டெஸ்ட்

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றிய நிலையில், டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. தொடர்ந்து நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ், 1-0 என்ற முன்னிலையுடன் இரண்டாவது டெஸ்டில் களமிறங்கியது.

மழை

இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 3-ம் தேதி தொடங்கியது. போட்டியின் கடைசி நாளில் இலங்கை தனது 2-வது இன்னிங்ஸை 9 விக்கெட் இழப்புக்கு 251 ரன்களில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 302 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஜான் கேம்ப்பெல் மற்றும் பிராண்டன் கிங் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அணி 89 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. நீண்ட நேரம் மழை நீடித்ததால் போட்டி தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது.

டிரா

பின்னர் மாலை நேரத்தில் ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டநிலையில், போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்த டிராவின் மூலம், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது. இதன் மூலம் 2022-ஆம் ஆண்டு பங்களாதேஷுக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற பிறகு, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தங்கள் மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. மேலும், இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை கைப்பற்றியதும் இதுவே முதல் முறையாகும்.

வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதன்பின் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

மறுபுறம், இலங்கை அணி இன்னும் ஐந்து வாரங்களில் தனது சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்க உள்ளது. அந்த போட்டிகள் காலி மற்றும் கொழும்பில் நடைபெறவுள்ளன.