மும்பை,
ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு வேகப்பந்து வீசக்கூடிய ஆல்-ரவுண்டர் தேவைப்படும் நிலையில், ஹர்திக் பாண்டியா அந்த அணிக்கு பொருத்தமான வீரராக பார்க்கப்படுகிறார். அதற்கு பதிலாக ஜெய்ஸ்வாலை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அனுப்புவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் 2026 சீசனில் ஜெய்ஸ்வால் 16 போட்டிகளில் 427 ரன்கள் எடுத்தார். 3 அரைசதங்களையும் பதிவு செய்தார். மறுபுறம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்சி, 2026 சீசனில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 15 வயதிலேயே 16 போட்டிகளில் 776 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பி வென்று பிரமிக்க வைத்தார்.
ஹர்திக் பாண்டியாவை தங்கள் அணிக்கு கொண்டு வர சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட அணிகள் ஆர்வம் காட்டுவதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுகின. இருப்பினும் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என மும்பை தெரிவித்தது.
ஜெய்ஸ்வால் மும்பை இந்தியன்ஸுக்கும், ஹர்திக் பாண்டியா ராஜஸ்தான் ராயல்ஸுக்கும் செல்வது தற்போது தகவலாக மட்டுமே பார்க்கப்படுகிறது. அணிகளின் அதிகாரபூர்வ அறிவிப்புக்கு பிறகே இந்த மாற்றம் உறுதி செய்யப்படும்.