மும்பை,
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் முன்னாள் சாம்பி யன்கள் மும்பை- கர்நாடகா அணிகள் இடையி லான கால்இறுதி ஆட்டம் மும்பையில் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங் சில் முறையே மும்பை 120 ரன்களும், கர்நா டகா 173 ரன்களும் எடுத்தன. 53 ரன் பின்தங் கிய மும்பை அணி 2-வது இன்னிங்சில் 377 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் கர்நாடகாவுக்கு 325 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட் டது. அதை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய கர்நாடகா 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்திருந்தது. லோகேஷ் ராகுல் (60 ரன்), கருண் நாயர் (9 ரன்) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 4-வது நாளான நேற்று கர்நாடகா வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். கருண் நாயர் 13 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆனார். 4-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுலும், ரவிச்சந்திரன் ஸ்மரனும் இணைந்து அணியை இலக்கை நோக்கி வேகமாக நகர்த்தினர். முதல்தர கிரிக்கெட்டில் தனது 24-வது சதத்தை நிறைவு செய்த லோகேஷ் ராகுல் 130 ரன்களில் (182 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். ஸ்மரன் (11 பவுண்டரியுடன் 83 ரன், நாட்-அவுட்) கடைசி வரை களத்தில் நின்று வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.
கர்நாடக அணி 73.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 325 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. 42 முறை சாம்பியனான மும்பை கால்இறுதியுடன் நடையை கட்டியது. வருகிற 15-ந்தேதி தொடங்கும் அரைஇறுதியில் கர்நாடக அணி, உத்தரகாண்டை எதிர்கொள்கிறது.