சண்டிகார்,
முன்னாள் சாம்பியனான தமிழக அணி 'டி' பிரிவில் அங்கம் வகிக்கிறது.
92-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் எலைட் பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.
முன்னாள் சாம்பியனான தமிழக அணி 'டி' பிரிவில் அங்கம் வகிக்கிறது. தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தானுடன் டிரா செய்த தமிழக அணி, சொந்த ஊரில் நடந்த அடுத்த இரு ஆட்டங்களில் உத்தரகாண்ட், ரெயில்வே அணிகளை தோற்கடித்தது.
இந்த நிலையில் சாய் கிஷோர் தலைமையிலான தமிழக அணி தனது 4-வது லீக்கில் இன்று சண்டிகாரை (4 நாள் ஆட்டம்) சந்திக்கிறது. சண்டிகாரில் உள்ள செக்டார் 16 ஸ்டேடியத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்கி நடக்கும் இந்த போட்டியில் தமிழக அணி ஹாட்ரிக் வெற்றிக்கு குறிவைத்துள்ளது. மற்ற ஆட்டங்களில் ஜம்மு-காஷ்மீர்- புதுச்சேரி, ரெயில்வே- மும்பை, பஞ்சாப்- ஆந்திரா, விதர்பா- மத்தியபிரதேசம் அணிகள் மோதுகின்றன.