சண்டிகர்,
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் சண்டிகர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 571 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் பிரதோஷ் ரஞ்சன் பால் இரட்டைச் சதமும், எஸ். அஜித் ராம் சதமும் அடித்து அசத்தினர்.
சண்டிகரில் நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், பிரதோஷ் ரஞ்சன் பால் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தமிழ்நாடு அணி 4 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் எடுத்திருந்தது. பிரதோஷ் ரஞ்சன் பால் 138 ரன்களுடனும், அஜிதேஷ் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. நேற்றைய 34 ரன்களுடன் களமிறங்கிய அஜிதேஷ் அதே ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து பிரதோஷ் ரஞ்சன் பாலுடன் எஸ். அஜித் ராம் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பிரதோஷ் ரஞ்சன் பால் தனது சதத்தை இரட்டை சதமாக மாற்றினார். அவர் 208 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய அஜித் ராம் சதம் அடித்து அசத்தினார். இதையடுத்து தமிழ்நாடு அணி 7 விக்கெட் இழப்புக்கு 571 ரன்கள் குவித்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. அப்போது அஜித் ராம் 115 ரன்களுடனும், கேப்டன் சாய் கிஷோர் 36 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய சண்டிகர் அணி, 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்துள்ளது. தமிழ்நாடு அணியின் கேப்டன் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.