சென்னை,
இந்தியாவில் நடைபெறும் பிரதான முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையின் 92-வது சீசன் இன்று பல்வேறு நகரங்களில் தொடங்குகிறது. இதில் தமிழக அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
இந்தியாவில் 1934-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்த ஆண்டு எலைட் மற்றும் பிளேட் என இரு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. எலைட் பிரிவில் 32 அணிகள் இடம்பெற்றுள்ளன. அவை தலா 8 அணிகள் கொண்ட 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் சாம்பியனான தமிழக அணி டி பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் 42 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியுடன், சண்டிகர், அரியானா, இமாசலப் பிரதேசம், ரெயில்வே, ராஜஸ்தான், உத்தரகாண்ட் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.
இன்று நடைபெறும் முதல் சுற்று லீக் ஆட்டத்தில் சாய் கிஷோர் தலைமையிலான தமிழக அணி, மானவ் சுதர் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது.