ஹூப்ளி,
ரஞ்சி கோப்பை பைனல் கர்நாடகா- ஜம்மு-காஷ்மீர் இடையே ஹூப்ளியில் நடைபெற்று வருகிறது. கடந்த 24-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜம்மு-காஷ்மீர் பேட்டிங் தேர்வு செய்தது. ஷுபம் பண்டிர் (121), யாவெர் ஹசன் (88), பராஸ் டோக்ரா (70), அப்துல் சமாத் (61), கணையா வதாமேன் (70), சஹில் லோத்ரா (72) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 584 ரன்கள் குவித்தது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய கர்நாடகாவை 293 ரன்னில் சுருட்டியது. மயங்க் அகர்வால் அதிகபட்சமாக 160 ரன்கள் சேர்த்தார். ஜம்மு-காஷ்மீர் அணியின் அகிப் நபி 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.291 ரன்கள் முன்னிலையுடன் ஜம்மு-காஷ்மீர் 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இன்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் தொடக்க வீரர் இக்பால் ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் எடுத்துள்ளார். இதனால் ஜம்மு-காஷ்மீர் 4 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்துள்ளது.தற்போது வரை 477 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை கடைசி நாள் ஆட்டமாகும். ஜம்மு-காஷ்மீர் தொடர்ந்து விளையாட முயற்சிக்கும்.
500 ரன்கள் இலக்கு நிர்ணயித்தாலும் கூட கர்நாடக அணியால் வெற்றி பெற முடியாது.அதேவேளையில் போட்டி வெற்றித் தோல்வியின்றி டிரா ஆனாலும், முதல் இன்னிங்சில் ஜம்மு-காஷ்மீர் முன்னிலை பெற்றுள்ளதால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இதனால் ஜம்மு-காஷ்மீர் ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல இருக்கிறது.