ஷார்ஜா,
ஆண்களுக்கான சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் படைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது ஆட்டம் நேற்று (அக். 29) ஷார்ஜாவில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ரஷீத் கான் தனது 200-வது சர்வதேச டி20 விக்கெட்டைக் கைப்பற்றினார்.
ஜிம்பாப்வே அணியின் இன்னிங்ஸில் 9-வது ஓவரை வீசிய ரஷீத் கான், அந்த ஓவரின் 3-வது பந்தில் விக்கெட் கீப்பர் பேட்டரான தடிவனாஷே மருமானியை 2 ரன்களில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழக்க செய்தார். இதன்மூலம் 200 விக்கெட்டுகளைக் கடந்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்தார்.
தனது 120-வது சர்வதேச டி20 போட்டியில் இந்த மைல்கல்லை எட்டிய ரஷீத் கான், தற்போது 200 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் அடில் ரஷீத் 171 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள ரஷீத் கான், இதற்கு முன்பும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
மேலும், அனைத்து வகையான டி20 போட்டிகளையும் சேர்த்து 700-க்கும் அதிகமான விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள அவர், உலகின் முன்னணி டி20 பந்துவீச்சாளர்களில் ஒருவராகத் தொடர்ந்து திகழ்கிறார்.