சென்னை,
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த முக்கியமான போட்டியில் தொடக்க வீரராக அபிஷேக் சர்மா விளையாடுவாரா? என்பது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் இதுகுறித்து முக்கியமான கருத்துகளை தெரிவித்துள்ளார். இறுதிப்போட்டியில் அபிஷேக் சர்மாவுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் அரையிறுதியில் அவரது ஆட்டம் ஏமாற்றமளித்ததாகவும் கூறினார்.
அரையிறுதியில் அபிஷேக் சர்மா சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் பெரிய ஷாட் அடிக்க முயன்றது தவறு என அவர் கூறினார். போட்டியின் நிலையை புரிந்து கொண்டு விளையாடுவதை அபிஷேக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாடியதை நினைவுபடுத்திய அஷ்வின், மிட்செல் சான்ட்னர், மேட் ஹென்றி போன்ற தரமான பந்துவீச்சாளர்களை தைரியமாக எதிர்கொண்ட அனுபவம் அவருக்கு இருப்பதாக கூறினார். அதனால் சில போட்டிகளில் பார்ம் குறைந்ததற்காக உடனே நம்பிக்கைை இழக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அபிஷேக்குடன் சரியான முறையில் பேச வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அழுத்தம் அதிகமானால் அவரது இயல்பான ஆட்டம் பாதிக்கப்படும் என்றும் நேர்மறை மனநிலையுடன் விளையாடினால்தான் அபிஷேக் சர்மாவின் திறமை முழுமையாக வெளிப்படும் என்றும் கூறினார். மேலும், இறுதிப்போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அஷ்வின் வலியுறுத்தினார்.