தோஹா:
ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் மூன்றாவது முறையாக பட்டம் வெல்ல் இலங்கை ஏ அணிக்கு 217 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை 2026 ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் ஏ அணியும் இலங்கை ஏ அணியும் மோதி வருகின்றன.
தோஹாவில் உள்ள வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் ஏ அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணி, இலங்கை பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாட்டான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது.
பாகிஸ்தான் அணியில் ஷாஹ்சைப் கான் அதிகபட்சமாக 91 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். ஷமில் ஹுசைன் 40 ரன்களும், விக்கெட் கீப்பர் ரோஹைல் நசீர் 37 ரன்களும் சேர்த்தனர். கேப்டன் அப்துல் சமத் 33 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை.
இறுதியில் பாகிஸ்தான் ஏ அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது. இதனால் இலங்கை ஏ அணிக்கு 217 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
இதுவரை இந்தத் தொடரில் பாகிஸ்தான் ஏ அணி மூன்று முறையும், இலங்கை ஏ அணி இரண்டு முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இதனால், மூன்றாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பில் இலங்கை ஏ அணியும், நடப்பு சாம்பியன் என்ற பெருமையைத் தக்கவைக்கும் நோக்கில் பாகிஸ்தான் ஏ அணியும் களமிறங்கியுள்ளன.