2027 ஐபிஎல் தொடருக்கான பயிற்சியாளர் குழுவில் அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறது ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி. அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ராபின் உத்தப்பா புதிய பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணிக்காக 2007 டி20 உலகக்கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த ராபின் உத்தப்பா, ஐபிஎல் தொடரிலும் சிறப்பான அனுபவம் கொண்டவர். 2008-ம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அவர், தற்போது சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த அணியுடன் இணைந்துள்ளார். தனது ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.
குறிப்பாக, 2014-ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 660 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றார். தனது ஐபிஎல் வாழ்க்கையில் 205 போட்டிகளில் விளையாடி 4,952 ரன்கள் எடுத்துள்ளார். அதிரடியாக விளையாடும் திறன், அனுபவம் மற்றும் இளம் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கும் திறன் ஆகியவை மும்பை அணிக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கீரன் பொல்லார்டு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய பயிற்சியாளர் குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ராபின் உத்தப்பா பேட்டிங் பயிற்சியாளராகவும், நியூசிலாந்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் மெக்லனகன் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பயிற்சியாளராகவும், தவால் குல்கர்னி வளர்ந்து வரும் பந்துவீச்சாளர்களுக்கான மேம்பாட்டுப் பயிற்சியாளராகவும் பொறுப்பேற்க உள்ளனர்.
2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தைப் பிடித்து பிளேஆப் வாய்ப்பை இழந்தது. இதனால் 2027 சீசனில் வலுவான அணியாகத் திரும்பும் நோக்கில் பயிற்சியாளர் குழுவில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளது. பொல்லார்டு தலைமையிலான புதிய பயிற்சியாளர் குழுவும், உத்தப்பாவின் பேட்டிங் அனுபவமும் மும்பை அணியின் ஆட்டத்தில் என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.