புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த அஜித் அகர்கர் மற்றும் பிசிசிஐ இடையேயான உறவில் ஏற்பட்ட விரிசலே அவரது பதவி விலகலுக்கு முக்கிய காரணமாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம் தொடர்பான விவகாரம், வி.வி.எஸ். லட்சுமணுடனான கருத்து வேறுபாடுகள், இங்கிலாந்து தொடருக்குப் பிறகு நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அகர்கர் பங்கேற்காதது ஆகியவை முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பு, ரோகித் சர்மாவை ஒருநாள் அணியில் இருந்து படிப்படியாக விலக்கி, 2027 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த முடிவு ரோகித்துக்கு தெரிவிக்கப்பட்ட பின்னர், அவர் தனது அதிருப்தியை பிசிசிஐயின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், ரோகித் சர்மாவின் ஓய்வு குறித்து வெளியான தகவல்களை மறுத்து பிசிசிஐ சார்பில் அறிக்கை வெளியானது. இந்த அறிக்கை அகர்கருக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தப்படவில்லை என்றும், இதுவே இரு தரப்புக்கும் இடையேயான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள 2027 ஒருநாள் உலகக் கோப்பையை மனதில் வைத்து அணியை இப்போதே தயார் செய்ய வேண்டும் என்பது அகர்கரின் அணுகுமுறையாக இருந்ததாக கூறப்படுகிறது.
யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு போதுமான ஒருநாள் போட்டிகளில் விளையாடி தயாராகும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அகர்கர் கருதியதாகவும், மறுபுறம் ரோகித் தொடர்ந்து ரன்கள் குவித்து வருவதால் அவரது எதிர்காலத்தை அவசரமாக முடிவு செய்ய வேண்டாம் என்ற நிலைப்பாடு பிசிசிஐ தரப்பில் இருந்ததாகவும் பிடிஐ நிறுவனம் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகர்கர் மற்றும் வி.வி.எஸ். லட்சுமண் இடையேயும் சில முக்கிய விவகாரங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக காயமடைந்த வீரர்களை நிர்வகிப்பது, வீரர்களுக்கான மீட்பு கால அட்டவணை மற்றும் இந்தியா ஏ அணியின் போட்டி அட்டவணை ஆகியவை தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தது.
இந்தியா ஏ அணியின் போட்டிகள் உள்நாட்டு போட்டிகளுடன் மோதும் வகையில் அமைந்தது மற்றும் சர்வதேச தொடர்களுடன் ஒரே நேரத்தில் இந்தியா ஏ போட்டிகள் நடத்தப்பட்டதும் விவாதத்துக்கு காரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இந்தியாவின் முன்னணி வீரர்களை அனுப்புவது தொடர்பாகவும் அகர்கருக்கு கேள்விகள் இருந்தது.
ஆசிய விளையாட்டில் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் இருந்தாலும், இந்தியாவின் முன்னணி வீரர்களை முழுமையாக பயன்படுத்த வேண்டுமா என்பது தொடர்பாக வேறுபட்ட கருத்துகள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்திய அணியின் சமீபத்திய இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து தொடர் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக மும்பையில் பிசிசிஐ முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது.இந்தக் கூட்டத்தில் கேப்டன் கில், டி20 கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், வி.வி.எஸ். லட்சுமண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் அஜித் அகர்கர் நேரிலும், ஆன்லைன் மூலமாகவும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, கூட்டம் குறுகிய கால அறிவிப்பில் நடத்தப்பட்டதால் அகர்கர் வேறு இடத்தில் இருந்ததாகவும், அவரால் ஆன்லைனிலும் இணைய முடியவில்லை என்றும் விளக்கம் அளித்திருந்தார்.
ஆனால், பிசிசிஐ வட்டாரத்தில் சிலர் இவ்வளவு முக்கியமான கூட்டத்தில் தேர்வுக்குழுத் தலைவர் கலந்து கொண்டிருக்க வேண்டும் என்று கருதியதாக பிடிஐ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.
ரோகித் விவகாரம், லட்சுமணுடனான கருத்து வேறுபாடுகள் மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காதது என அடுத்தடுத்து ஏற்பட்ட பிரச்சினைகள், அகர்கர்–பிசிசிஐ உறவை மேலும் மோசமடையச் செய்ததால் அவர் தேர்வுக்குழு தலைவர் பதவியில் தொடர் விரும்பவில்லை.