சென்னை,
ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில் உத்தரகாண்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு, உத்தரகாண்ட் அணிகள் இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது.
மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கியநிலையில், டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் சாய் கிஷோர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த உத்தரகாண்ட் அணி, தமிழ்நாடு பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 56.2 ஓவர்களில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அவ்னீஷ் சுதா 54 ரன்களும், மயங்க் மிஷ்ரா 33 ரன்களும் எடுத்தனர்.
தமிழ்நாடு தரப்பில் குர்ஜப்னீத் சிங், சாய் கிஷோர் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்சைத் தொடங்கிய தமிழ்நாடு அணி, சிறப்பாக விளையாடி 313 ரன்கள் குவித்தது. பிரதோஷ் ரஞ்சன் பால் பொறுப்புடன் ஆடி 136 ரன்கள் எடுத்து சதமடித்தார். பாபா இந்திரஜித் 77 ரன்களும், ஜெகதீசன் 37 ரன்களும் எடுத்தனர்.
இதன் மூலம் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 179 ரன்கள் முன்னிலை பெற்றது.
179 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய உத்தரகாண்ட் அணி, தமிழ்நாடு வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தமிழ்நாடு தரப்பில் சாய் கிஷோர் 6 விக்கெட்டுகளையும், அஜித் ராம் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனால் தமிழ்நாடு அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.