கிரிக்கெட்

தனக்கு எதுவும் தெரியாது: மீண்டும் மறுத்த டேரன் லீமன்

கேமரூன் பேன்கிராப்ட் சமீபத்தில் வெளியிட்ட விரிவான அறிக்கை புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் 2018ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சாண்ட்பேப்பர் விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த டேரன் லீமன், பந்தை சேதப்படுத்த சாண்ட்பேப்பர் பயன்படுத்தும் திட்டம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று மீண்டும் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னாள் வீரர் கேமரூன் பேன்கிராஃப்ட் சமீபத்தில் வெளியிட்ட விரிவான அறிக்கை புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது

ஆஸ்திரேலிய வீரர்

2018ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுனில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியின்போது, ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பேன்கிராஃப்ட் சாண்ட்பேப்பரைப் பயன்படுத்தி பந்தின் தன்மையை மாற்ற முயன்றது தொலைக்காட்சி கேமராவில் பதிவானது. இதையடுத்து அப்போதைய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பேன்கிராஃப்ட் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடையும், பேன்கிராஃப்டுக்கு 9 மாத தடையும் விதிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து டேரன் லீமனும் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார்.

டேரன் லீமன்

இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில் 4,000 வார்த்தைகளுக்கும் அதிகமான விரிவான அறிக்கையை வெளியிட்ட பேன்கிராஃப்ட், பந்தை சேதப்படுத்தும் திட்டம் குறித்து அணியில் இருந்த பலருக்கும் தெரிந்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, அப்போது பயிற்சியாளராக இருந்த டேரன் லீமன் மற்றும் பந்துவீச்சுப் பயிற்சியாளர் டேவிட் சேகர் ஆகியோர் திட்டம் தொடர்பான உரையாடலின்போது இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், தொலைக்காட்சி கேமராவில் சாண்ட்பேப்பர் சிக்கிய பிறகு, லீமன் வாக்கி-டாக்கி மூலம் 12-வது வீரர் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்பிடம் அதனை அகற்றுமாறு கூறியதாகவும் பேன்கிராஃப்ட் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த டேரன் லீமன், சாண்ட்பேப்பர் பயன்படுத்தப்படுவது குறித்து தனக்கு முன்கூட்டியே எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். பேன்கிராஃப்ட் குறிப்பிட்ட உரையாடல் தனக்கு நினைவில் இல்லை என்றும், தொலைக்காட்சியில் சம்பவம் ஒளிபரப்பான பிறகுதான் சாண்ட்பேப்பர் பயன்படுத்தப்பட்டது தெரியவந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், எட்டரை ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் என்பதால் அனைத்து உரையாடல்களும் நினைவில் இல்லை என்றும், பேன்கிராஃப்டின் நினைவுக்கும் தனது நினைவுக்கும் வேறுபாடு இருப்பதாகவும் விளக்கமளித்துள்ளார்.

SCROLL FOR NEXT